தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சேலத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி


தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சேலத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 4 Nov 2021 1:43 AM IST (Updated: 4 Nov 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க சேலத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

சேலம்
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் குறைந்ததால் இந்த ஆண்டு தீபாவளியை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் ஜவுளி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இந்தநிலையில், சேலம் மாநகரில் நேற்று காலை பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் கடைவீதி, முதல் அக்ரஹாரம், சின்னக்கடைவீதி, அருணாசல ஆசாரி வீதி, தாதுபாய்குட்டை, புதிய பஸ் நிலையம், சுவர்ணபுரி, 4 ரோடு, 5 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். குறிப்பாக கடை வீதி, முதல் அக்ரஹாரத்தில் காணும் இடம் எல்லாம் மனித தலைகளாகவே காட்சி அளித்தன.
ஜவுளி கடைகளில் கூட்டம்
சேலம் கடைவீதிக்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள், தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைகளிலும், சாலையோர வியாபாரிகளிடமும் ஜவுளி விற்பனை மும்முரமாக நடந்தது. குறிப்பாக சாலையோர கடைகளில் சேலை, சுடிதார், பேண்ட், சிறுவர், சிறுமிகளுக்கான ஆடைகள் விற்பனை படுஜோராக நடந்தது.
இதுதவிர, பெண்கள் பயன்படுத்தும் வளையல், கம்மல், ஹேண்ட்பேக் மற்றும் செருப்புகள் வியாபாரமும் அதிகமாக நடந்தது. கூட்டம் காரணமாக கடைவீதிக்குள் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் சிலர் ஈடுபடலாம் என்பதால் போலீசார் தீவிர பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முக்கிய இடங்களில் கோபுரம் அமைத்து போலீசார் கண்காணித்தனர்.
பட்டாசு விற்பனை
இது ஒருபுறம் இருக்க, சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், 4 ரோடு, 5 ரோடு, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இனிப்பு கடைகளில் ஸ்வீட் மற்றும் கார வகைகளின் விற்பனை களைகட்டியது. இதனால் அந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 
அதேபோல், மாநகரில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பட்டாசு கடைகள் வைக்க உரிமம் பெற்றுள்ளனர். இதனால் பட்டாசுகள் வாங்கவும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம் பகுதிகளில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Next Story