புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி
பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நேற்று ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு: பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் உள்ள புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நேற்று ரசிகர்கள் குவிந்தனர். அவர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
புனித் ராஜ்குமார் மரணம்
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். ரசிகர்களால் அப்பு, பவர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த மாதம் (அக்டோபர்) 29-ந் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். பின்னர் அவரது உடல் பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலிக்காக பெங்களூரு கன்டீரவா விளையாட்டு மைதானத்தில் வைக்கப்பட்டது.
2 நாட்கள் ரசிகர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் கடந்த மாதம் 31-ந் தேதி கோரகுண்டேபாளையாவில் உள்ள பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த ஸ்டூடியோவில் தான் புனித் ராஜ்குமாரின் தந்தை ராஜ்குமார், தாய் பர்வதம்மா ஆகியோரின் நினைவிடமும் உள்ளது. புனித் ராஜ்குமாரின் உடலை அடக்கம் செய்த பின்னர் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு ரசிகர்கள் படையெடுத்து வந்தனர். ஆனால் ஸ்டூடியோவுக்குள் நுழைய ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
நினைவிடத்தில் குவிந்த ரசிகர்கள்
இந்த நிலையில் நேற்று முன்தினம் புனித் ராஜ்குமார் இறந்து 5-வது நாள் காரியம் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு புனித் ராஜ்குமார் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பால், நெய் ஊற்றி வழிபட்டனர். இதையடுத்து 3-ந் தேதி (அதாவது நேற்று) முதல் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு செல்ல ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று காலை முதல் கன்டீரவா ஸ்டூடியோவுக்குள் செல்ல ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று அதிகாலை முதலே ரசிகர்கள் கன்டீரவா ஸ்டூடியோவில் குவிந்தனர்.
கண்ணீர் மல்க அஞ்சலி
நீண்ட வரிசையில் நின்று புனித் ராஜ்குமாரின் சமாதியை ரசிகர்கள் பார்வையிட்டனர். மேலும் சில பெண்கள் தங்களது கைக்குழந்தைகளுடன் நினைவிடத்துக்கு வந்தனர். சில ரசிகர்கள் புனித்ராஜ்குமாரின் நினைவிடத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பலரும் கண்ணீர்மல்க புனித்ராஜ்குமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செல்போனில் சமாதியை புகைப்படம் எடுத்து கொண்டனர். ரசிகர்கள் வருகையை யொட்டி ராஜ்குமார், பர்வதம்மாவின் நினைவிடங்களும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அங்கும் ரசிகர்கள் வழிபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் கன்டீரவா ஸ்டூடியோவுக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story