லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது


லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2021 2:14 AM IST (Updated: 4 Nov 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே லஞ்சம் வாங்கிய போது ஊழல் தடுப்பு படை பிடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கினார். தப்பி ஓடி தலைமறைவானார். அவரை கைது செய்ய ஊழல் தடுப்பு படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

துமகூரு: துமகூரு அருகே லஞ்சம் வாங்கிய போது ஊழல் தடுப்பு படை பிடியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிக்கினார்.
ரூ.28 ஆயிரம் லஞ்சம்
துமகூரு மாவட்டம் குப்பி தாலுகா சி.எஸ்.புரா போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சோமசேகர். அந்த போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணியாற்றி வருபவர் நயாஸ். இந்த நிலையில் கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந் தேதி குடும்ப தகராறில் ஏற்பட்ட தாக்குதல் தொடர்பாக சந்திரண்ணா என்பவரை சி.எஸ்.புரா போலீசார் கைது செய்து இருந்தனர்.

அவரிடம் இருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் சந்திரண்ணா ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை விடுவிக்க வேண்டும் என்று சந்திரண்ணா, ஏட்டு நயாசிடம் கேட்டு இருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சோமசேகர், ஏட்டு நயாஸ் ஆகியோர் காரை விடுவிக்க ரூ.28 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டு இருந்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் கைது

இதற்கு ஒப்புக்கொண்ட சந்திரண்ணாவும் ரூ.12 ஆயிரத்தை முதல் தவணையாக கொடுத்து இருந்தார். ஆனால் மேற்கொண்டு ரூ.16 ஆயிரம் கொடுக்க விரும்பாத சந்திரண்ணா, சோமசேகர் மற்றும் நயாஸ் மீது ஊழல் தடுப்பு படை போலீசில் புகார் அளித்து இருந்தார். அப்போது சந்திரண்ணாவுக்கு சில அறிவுரைகள் கூறிய ஊழல் தடுப்பு படையினர் அவரிடம் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி இருந்தனர்.

அதன்படி நேற்று காலை போலீஸ் நிலையத்தில் வைத்து சோமசேகர், நயாசிடம் லஞ்ச பணத்தை சந்திரண்ணா கொடுத்தார். அப்போது அங்கு வந்த ஊழல் தடுப்பு படையினர் சோமசேகர், நயாசை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் ஊழல் தடுப்பு படை போலீசார் தங்களது போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று இருந்தனர்.

வீடியோ வைரல்

இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் ஊழல் தடுப்பு படையினர் உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சோமசேகர் ஊழல் தடுப்பு படை போலீஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழல் தடுப்பு படையினர் சோமசேகரை துரத்தி சென்றனர். ஆனாலும் சோமசேகர் தப்பி சென்று விட்டார். இந்த காட்சிகளை பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள சோமசேகரை கைது செய்ய ஊழல் தடுப்பு படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பின்னர் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story