சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை கண்டித்து குருப சமுதாயத்தினர் போராட்டம்
சித்தராமையா குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை கண்டித்து சிக்கமகளூருவில் குருப சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கமகளூரு: சித்தராமையா குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை கண்டித்து சிக்கமகளூருவில் குருப சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சித்தராமையா குறித்து அவதூறு கருத்து
முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முஸ்லிம் அமைப்பின் நிகழ்ச்சியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கலந்துகொண்டார். அப்போது அவர், முஸ்லிம்கள் அணியும் குல்லாவை அணிந்துள்ளார். இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் தேசிய பொதுசெயலாளரான சி.டி.ரவி எம்.எல்.ஏ. தனது டுவிட்டர் பக்கத்தில் சித்தராமையாவின் சமுதாயம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வின் கருத்துக்கு சித்தராமையாவின் ஆதரவாளர்கள் மற்றும் குருப சமுதாயத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குருப சமுதாயத்தினர் போராட்டம்
அதன்படி நேற்றுமுன்தினம் சிக்கமகளூருவில் சி.டி.ரவி எம்.எல்.ஏ.வை கண்டித்து குருப சமுதாயத்தினர், அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆசாத்பூங்காவில் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு எதிராக கோஷமிட்டனர். முன்னதாக போராட்டக்காரர்கள், சிக்கமகளூரு அனுமந்தப்பா சர்க்கிளில் இருந்து எம்.ஜி ரோடு வழியாக ஆசாத் பூங்காவிற்கு ஊர்வலமாக வந்திருந்தனர். இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஏ.என்.மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்
சித்தராமையாவையும், குருப சமுதாயத்தினரையும் அவமானப்படுத்தும் வகையில் சி.டி.ரவி எம்.எல்.ஏ. அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு அவர், பொது மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிப்பு கேட்கும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும். சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு தேர்தல் சமயத்தில் தக்க பாடம் புகட்டுவோம்.
4 முறை எம்.எல்.ஏ.வான அவர், தொகுதிக்கு என்ன செய்துள்ளார். தத்தா குகைக்கோவில் விவகாரத்தில் அரசியல் செய்து கொண்டு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சொத்து சேர்த்து வைத்துள்ளார். சித்தராமையாவின் மதம், சமுதாயம் குறித்து பேசும் சி.டி.ரவி, பெட்ரோல்-டீசல் விலையுயர்வை பற்றி பேசுவது கிைடயாது என்றார்.
பின்னர் அவர்கள், கலெக்டர் ரமேசிடம் தலைவர்களின் சமுதாயம், மதம் குறித்து அவதூறாக பேசுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மனு ஒன்றை கொடுத்துவிட்டு சென்றனர். இந்த போராட்டத்தால் சிக்கமகளூரு ஆசாத் பூங்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story