தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு' உயர்வு மல்லிகை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு உயர்வு மல்லிகை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Nov 2021 3:08 AM IST (Updated: 4 Nov 2021 3:08 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

நெல்லை:
தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லையில் பூக்கள் விலை `கிடுகிடு'வென உயர்ந்தன. நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
வடகிழக்கு பருவமழை
நெல்லை சந்திப்பில் கெட்வெல் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு நெல்லை, மானூர், கங்கை கொண்டான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, பிச்சி, கேந்தி, சம்பங்கி உள்ளிட்ட பல்வேறு வகை பூக்கள் கொண்டு வரப்பட்டு மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நெல்லை பகுதியில் வட கிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது. இதனால் பூக்கள் விலை சற்று அதிகரித்தே காணப்பட்டது.
 விலை உயர்வு
இன்று (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் நேற்று நெல்லையில் அனைத்து பூக்களின் விலையும் `கிடுகிடு'வென உயர்ந்தன. கடந்த சில நாட்களாக ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று ரூ.2 ஆயிரத்துக்கும், ரூ.700 முதல் ரூ.1000 வரை விற்பனையான ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1700 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், கேந்தி ரூ.60 முதல் ரூ.80- க்கும், சம்பங்கி ரூ.80 முதல் ரூ.100- க்கும், மரிகொழுந்து ரூ.120- க்கும், செவ்வந்தி (மஞ்சள்) ரூ.100 - க்கும், வண்ண செவ்வந்தி ரூ.200 வரையும், ரோஜா ரூ.200 முதல் ரூ.250 வரையும் விற்பனை ஆனது. பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டபோதும் பொதுமக்கள் பூக்களை தங்கள் வீட்டிற்கு வாங்கி சென்றனர்.

Next Story