தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் ‘பர்னிச்சர்’ கடையில் தீ விபத்தால் பரபரப்பு


தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் ‘பர்னிச்சர்’ கடையில் தீ விபத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Nov 2021 10:48 PM IST (Updated: 4 Nov 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

தியாகராயநகர், ரங்கநாதன் தெருவில் ‘பர்னிச்சர்’ கடையில் தீ விபத்தால் பரபரப்பு.

சென்னை,

சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் ஜெயசந்திரன் ‘பர்னிச்சர்’ கடை செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11.30 மணி அளவில் ஜெயசந்திரன் ‘பர்னிச்சர்’ கடையின் 2-வது மாடியில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் கிடைத்த சிறிது நேரத்தில் சென்னை தெற்கு மாவட்ட தீயணைப்பு அதிகாரி செய்யது முகமது ஷா தலைமையில், நிலைய அதிகாரிகள் ஜெயேந்திரன், சேகர், மாசிலாமணி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வண்டிகளுடன் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

‘பர்னிச்சர்’ கடையில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உள்ளே இருந்த மெத்தைகளில் தீ பற்றி எரிந்ததால் அதிக அளவில் புகை இந்த பகுதியில் காணப்பட்டது. தியாகராயநகரில் தீபாவளியை முன்னிட்டு, இருசக்கர வாகனங்களில் நிறைந்து காணப்பட்ட நிலையில் தீயணைப்பு உபகரணங்களுடன் வீரர்கள் இருந்ததால் உடனடியாக தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பொதுமக்கள், கடை ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நேரத்தில் மிகவும் கூட்டமாக காணப்படும் ரங்கநாதன் தெருவில் பெரும் புகை வெளியேறியதால் நேற்று மதியம் அந்த பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story