கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் ரூ.7 குறைப்பு


கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் ரூ.7 குறைப்பு
x
தினத்தந்தி 5 Nov 2021 12:08 AM IST (Updated: 5 Nov 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலை தலா ரூ.7 குறைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வந்தது.

பெங்களூரு: 
பா.ஜனதா அதிர்ச்சி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்தன.  மேலும் சமையல் எரிவாயு விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகினர். உச்சக்கட்ட அளவாக பெட்ரோல், டீசல் விலை ரூ.100-க்கும் மேல் உயர்ந்ததால் அத்தியாவசிய பொருட்கள் உள்பட அனைத்து வகையான பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. 
எனவே பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. 
ஆனாலும் மத்திய அரசு அமைதி காத்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டசபை மற்றும் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலேயே அக்கட்சி தோல்வியை தழுவியது. இதனால் ஆளும் பா.ஜனதா அதிர்ச்சி அடைந்தது.

கலால் வரி குறைப்பு

இந்த நிலையில் மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைப்பதாக அறிவித்தது. அதாவது பெட்ரோல் விலையில் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.10-ம் குறைக்கப்பட்டது.  

அதைத்தொடர்ந்து பா.ஜனதா ஆளும் மாநிலங்களான கர்நாடகம், குஜராத், உத்தரபிரதேசம், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும், பா.ஜனதா ஆட்சி இல்லாத தமிழகம், டெல்லி, புதுச்சேரி, கேரளா, மராட்டியம், மேற்குவங்காளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. 

விலை குறைப்பு விவரம்

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்ட மாநிலங்கள் மற்றும் எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் பின்வருமாறு:-
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.07-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.75-ம் குறைக்கப்பட்டுள்ளது. 
அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.6.35 குறைக்கப்பட்டு இருக்கிறது. 
தமிழகத்தில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.11.16 குறைக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் அதிகபட்சமாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.12.88 குறைக்கப்பட்டு இருக்கிறது. 

கோவா-உத்தரபிரதேசம்

நாட்டில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் 6 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தங்களது விற்பனை வரி, மதிப்பு கூட்டு வரியை குறைத்து பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைத்துள்ளது. அதில் கர்நாடகம் உள்பட 4 மாநிலங்கள் மட்டும் பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கோவா அரசு பெட்ரோல் விலை ரூ.5.47-ம், டீசல் விலை ரூ.4.38-ம் குறைத்துள்ளது. உத்தரபிரதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.12 குறைக்கப்பட்டுள்ளது. குஜராத் அரசு பெட்ரோல் விலை ரூ.5.65-ம், டீசல் விலை ரூ4.32-ம் குறைத்துள்ளது. 

கர்நாடகத்தில் ரூ.7 குறைப்பு

கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் தலா ரூ.7 குறைப்பதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.   
விலை குறைப்பின் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.110.04-ல் இருந்து ரூ.103.97-க்கும், டீசல் விலை ரூ.98.42-ல் இருந்து ரூ.86.67 ஆகவும் குறைந்திருக்கிறது. 
இதேபோல் மும்பையில் ரூ.115.85-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரு.109.98 ஆக குறைந்துள்ளது. அதேபோல் ரூ.106.62-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் டீசல் ரூ.94.14-க்கு குறைந்திருக்கிறது. 

தமிழகம்-புதுச்சேரி

மேலும் தமிழகத்தில் ரூ.106.66-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், ரூ.102.59-க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் டீசல் ரூ.91.43-க்கும் குறைந்துள்ளது. புதுச்சேரி அரசு மதிப்பு கூட்டு வரியை குறைத்ததன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் தலா ரூ.7 குறைத்துள்ளது. 
பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்ததை அடுத்து மாநில அரசுகளும் விலையை குறைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.2,100 கோடி நிதிச்சுமை

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்துள்ளது. மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி பெட்ரோல்-டீசல் விலையை குறைப்பது குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் நான் நேற்று (நேற்று முன்தினம்) ஆலோசனை நடத்தினேன். பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் கஷ்டங்களை உணர்ந்து, கர்நாடகத்தில் பெட்ரோல்-டீசல் விலையில் தலா 7 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு முடிவு இன்று (நேற்று) மாலையே அமலுக்கு வருகிறது. பெட்ரோலிய பொருட்களின் விலை குறைப்பால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,100 கோடி நிதிச்சுமை ஏற்படும். டெல்லி வரும்படி எனக்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுக்கவில்லை. அதனால் நான் டெல்லிக்கு செல்லவில்லை. பிட்காயின் விவகாரம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. இதுகுறித்து நான் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Next Story