ஆற்றுவாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரம்


ஆற்றுவாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 5 Nov 2021 7:37 PM IST (Updated: 5 Nov 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

புளியாம்பாராவில் ரூ.10½ லட்சத்தில் ஆற்றுவாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கூடலூர்

புளியாம்பாராவில் ரூ.10½ லட்சத்தில் ஆற்றுவாய்க்காலை தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பராமரிப்பில்லாத ஆற்றுவாய்க்கால்கள்

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை பருவமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது வழக்கம். இந்த நிலையில் மழை அதிகமாக பெய்யும் சமயத்தில் புதர்கள் நிறைந்து பராமரிப்பின்றி கிடக்கும் ஆற்று வாய்க்கால்களில் தண்ணீர் சீராக செல்ல வழியின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. 

குறிப்பாக கூடலூர் அருகே உள்ள புத்தூர்வயல், பாடந்தொரை, புளியாம்பாரா பகுதிக்குள் ஆண்டுதோறும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வந்தது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. 

ஊருக்குள் வெள்ளம்

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பாடந்தொரை பகுதியில் உள்ள ஆற்றுவாய்க்கால் தூர்வாரப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் திடீரென கனமழை பெய்தது. 

அப்போது புளியம்பாரா ஆற்றுவாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தது. இதில் ஆட்டோ மற்றும் பொருட்கள் அடித்து சென்றது. மேலும் பாலம் மற்றும் சாலையை மூழ்கடித்தவாறு தண்ணீர் சென்றது. இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வாழை, தேயிலை உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தது. பின்னர் மழை நின்றவுடன் தண்ணீர் வழிந்தோடியது.

ரூ.10½ லட்சம் ஒதுக்கீடு

இதைத்தொடர்ந்து அங்கு வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது ஆற்று வாய்க்கால் பராமரிப்பின்றி கிடப்பதை உறுதி செய்தனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் புளியம்பாரா ஆற்றுவாய்க்காலை தூர்வாரும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இதனால் புளியம்பாரா சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை (நீர் வளம்) அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, புளியாம்பாரா ஆற்றுவாய்க்காலை சுமார் 2 கி.மீ தூரம் தூர்வார ரூ.10½ லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.


Next Story