8 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


8 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 5 Nov 2021 7:37 PM IST (Updated: 5 Nov 2021 7:37 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் 8 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 8 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்று பரவல் கட்டுக்குள்...

நீலகிரி மாவட்டத்தில் தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25-க்கும் கீழ் குறைந்து உள்ளது. தொற்று பரவலை தடுக்க 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் மூலம் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. 

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பாதித்தாலும் பாதிப்பு அதிகமாக இல்லாததோடு, அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு குறைகிறது. தொற்று பாதிப்பு குறைந்ததால் அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. தற்போது 199 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளது. 

காலியாகும் படுக்கைகள்

ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சாதாரண 35 படுக்கைகளில் 13 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகளில் 8 படுக்கைகளும், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கைகளில் 7 படுக்கைகளும் நிரம்பி உள்ளது. மொத்தம் 215 படுக்கைகளில் 187 படுக்கைகள் காலியாக உள்ளது.

பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறை நாட்களில் வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். அவர்கள் மூலம் உள்ளூர் மக்களுக்கு தொற்று பரவுவதை தடுக்க சுற்றுலாத்தலங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக நீலகிரிக்கு கூடுதலாக தடுப்பூசி ஒதுக்கப்படுகிறது.

தடுப்பூசி

நீலகிரி மாவட்டம் முழுவதும் இதுவரை 7 கட்டங்களாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் உள்பட சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர். நீலகிரியில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 345 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 3 லட்சத்து 48 ஆயிரத்து 884 பேர் 2-வது டோஸ் போட்டுக்கொண்டனர். மொத்தம் 8 லட்சத்து 66 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியதை போல், 2-வது டோஸ் செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story