சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் குந்தா உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஊட்டியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊட்டி
நீலகிரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் குந்தா உள்ளிட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஊட்டியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மரம் முறிந்து விழுந்தது
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டியில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதியம் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழை காரணமாக ஊட்டி கலெக்டர் அலுவலக சந்திப்பில் இருந்து போலீஸ் குடியிருப்புக்கு செல்லும் சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அங்கு வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் மற்றும் வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது.
நீர்மட்டம் உயர்வு
வடகிழக்கு பருவமழை நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் தண்ணீர் அணைகளில் சேகரமாகிறது. இதன் மூலம் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
பைக்காரா அணையின் 100 அடி முழு கொள்ளளவில் 88 அடியாகவும், 184 அடி கொள்ளளவை கொண்ட எமரால்டு அணையில் 120 அடியாகவும், காமராஜ் சாகர் அணையின் முழு கொள்ளளவான 49 அடியில் 35 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணையில் 86 அடியாகவும், அவலாஞ்சி அணையின் மொத்த கொள்ளளவான 171 அடியில் 122 அடியாகவும், 210 அடி கொள்ளளவு கொண்ட அப்பர்பவானி அணையில் 160 அடியாகவும் நீர்மட்டம் அதிகரித்து இருக்கிறது. இதனால் அணைகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
மழை அளவு
நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
ஊட்டி-4.2, குந்தா-17, அவலாஞ்சி-38, எமரால்டு-12, கெத்தை-13, கிண்ணக்கொரை-23, கூடலூர்-14, தேவாலா-22 என மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 3 சென்டி மீட்டர் மழை பெய்தது.
Related Tags :
Next Story