தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளத்தில் தரைப்பாலம் மூழ்கியது
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தண்ணீரில் சிக்கிய லாரி மீட்கப்பட்டது.
பலத்த மழை
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடக்கிறது. வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். இந்த நிலையில் தொடர்ந்து ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் அதிக அளவில் மழை பெய்தது.
காட்டாற்று வெள்ளம்
இந்த மழை காரணமாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. உப்பாற்று ஓடையில் அதிக அளவில் தண்ணீர் பாய்ந்து கோரம்பள்ளம் குளத்தை நோக்கி சென்றது. இதே போன்று தட்டப்பாறை அருகே உள்ள ஓடையிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தட்டப்பாறையில் இருந்து பேரூரணி செல்லும் காட்டுப்பாதையில் உள்ள தாம்போதி பாலத்தை மழை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. நேற்று காலையில் அந்த ரோட்டில் சென்ற ஒரு லாரி வெள்ளத்தால் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. அந்த லாரி ரோட்டை விட்டு இறங்கி நின்றது. பின்னர் மழை வெள்ளம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. அதன்பிறகு லாரி மீட்கப்பட்டது.
தூத்துக்குடி அருகே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story