வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஆண்டில் 3-வது தடவை நிரம்பும் வைகை அணை முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று விடுக்கப்படுகிறது


வரலாற்றில் முதன் முறையாக  ஒரே ஆண்டில் 3-வது தடவை நிரம்பும் வைகை அணை  முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை இன்று விடுக்கப்படுகிறது
x
தினத்தந்தி 5 Nov 2021 8:50 PM IST (Updated: 5 Nov 2021 8:50 PM IST)
t-max-icont-min-icon

வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஆண்டில் 3-வது தடவை வைகை அணை நிரம்ப உள்ளது. இதையடுத்து இன்று முதல்கட்ட வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

ஆண்டிப்பட்டி:
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாய தேவைக்கும், குடிநீருக்கும் வைகை அணை பிரதானமாக விளங்குகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் 5 முறை மட்டுமே ஒரே ஆண்டில் 2 தடவை நிரம்பியுள்ளது. அதில் இந்த ஆண்டும் ஒன்றாகும். இந்த ஆண்டில் வைகை அணை கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதத்தில் முழுக்கொள்ளளவை எட்டியது. 
இதையடுத்து ஜூன் மாதம் முதல் 5 மாவட்ட விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது நீர்வரத்து போதுமான அளவில் இருந்ததால் நீர்மட்டம் 10 அடி மட்டுமே சரிந்தது. 
3-வது தடவை
இந்நிலையில் வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,175 கனஅடியாக அதிகரித்து உள்ளது. மேலும் நீர்மட்டம் 65.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,369 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. 
பொதுவாக வைகை அணை நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும்போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது 3-வது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்படும். மேலும் அணைக்கு வரும் தண்ணீர் உபரியாக ஆற்றில் திறக்கப்படும்.
இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை வைகை அணை 66 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு, வைகை அணை ஒரே ஆண்டில் 3-வது தடவை நிரம்பும் நிலை உருவாகியுள்ளது. இதனால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story