வராக நதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் அடித்து செல்லப்பட்டனர் தேடும் பணி தீவிரம்
வராக நதியில் வெள்ளத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள மேல்மங்கலத்தில் வித்யபாரதி வேதபாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள வராக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று இங்கு தங்கி படிக்கும் 5 மாணவர்கள் வராக நதி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க வந்தனர். அவர்களில் சென்னை திருவான்மியூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 20) என்ற மாணவர் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதை பார்த்து மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். அப்போது மதுரையை சேர்ந்த சுந்தரநாராயணன் (18) என்ற மாணவரும் திடீரென ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து மணிகண்டனும், சுந்தரநாராயணனும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் மாணவர்களை தீவிரமாக தேடினர். இதனிடையே இரவு நேரமாகி விட்டதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் இன்று(சனிக்கிழமை) தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story