சாமி உலா, தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெறும்


சாமி உலா, தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெறும்
x
தினத்தந்தி 5 Nov 2021 9:49 PM IST (Updated: 5 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் போது சாமி உலா மற்றும் தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவின் போது சாமி உலா மற்றும் தேரோட்டம் கோவில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சாமி உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா 7-ந் தேதி  துர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி வருகிற 23-ந் தேதி சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி உலா வரை 17 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 

கொரோனா  தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டை விட தற்போது ஒரு சில கூடுதல் தளர்வுகளுடன் இந்த ஆண்டு தீபத் திருவிழாவினை நடத்த அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட உள்ளது. 

கோவில் பணி தொடர்பான சாமி பல்லக்கு தூக்கும் பணியாளர்கள், கோவில் பணி தொடர்பான ஊழியர்கள், சிவாச்சாரியார்களுக்கு கோவில் நிர்வாகத்தால் உரிய அடையாள அட்டை அளிக்கப்பட்டு கோவிலிலுள்ளே சென்று பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள். 

கோவில் வளாகத்தில்...

கடந்த ஆண்டு கோவிலை சேர்ந்த கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் தீபத் திருவிழா நாட்களில் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த ஆண்டு அனுமதிக்கப்படுவார்கள். கோவிலின் வெளிப்புறத்தில் உள்ள மாடவீதியில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த சாமி திருவீதி உலா கடந்த ஆண்டைப் போன்று இந்த ஆண்டும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே ஆகம விதிகளின்படி நடைபெற உள்ளது. 

மேலும் ஏழாம் நாள் விழாவான 16-ந் தேதி கோவில் வளாகத்தின் வெளியே உள்ள மாடவீதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த அருணாசலேஸ்வரர் மகா தேரோட்டம் உள்ளிட்ட 5 தேரோட்ட நிகழ்வினையும் கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் கோவில் வளாகத்தின் உள்ளேயே 5-ம் பிரகாரத்தில் ஆகம விதிகளின்படி நடைபெற உள்ளது. 

கிரிவலத்துக்கு தடை

பவுர்ணமி மற்றும் தீபத் திருவிழா நாட்களான 17-ந் தேதி மதியம் ஒரு மணி முதல் 20-ந் தேதி வரை கிரிவலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 தீபத் திருவிழா நிகழ்ச்சியான 19-ந் தேதி அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தினை அதனைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள் மலைமீது ஏறி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

 திருவண்ணாமலை நகரம் மற்றும் நகரினை சுற்றி உள்ள பொதுமக்கள் 19-ந் தேதியன்று நடைபெறும் மகா தீபத் திருவிழாவினை தங்களது வீடுகளிலிருந்து அண்ணாமலையார் மலை உச்சியில் மீது ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்திட வேண்டும். பொதுமக்கள் நகர் மற்றும் கிரிவலப்பாதையில் எந்த ஒரு பகுதியிலும் தேவையின்றி கூடாமலும், கூட்ட நெரிசல் ஏற்படாமலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

தெப்பத்திருவிழா

திருவண்ணாமலை நகரம் அய்யங்குளத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வந்த தெப்பத் திருவிழா கடந்த ஆண்டு போன்று இந்த ஆண்டும் கோவில் வளாகத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் ஆகம விதிகளின்படி 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

தீபத்திருவிழா தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்கள், கோவில் இணையதளம், அரசு கேபிள் தொலைகாட்சி மற்றும் உள்ளூர் தொலைகாட்சிகள் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். வருகிற 23-ந் தேதி வரை திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. 

திருவிழா நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ் மற்றும் ெரயில் வசதி கிடையாது. மேலும் கடந்த ஆண்டைப் போன்று மாடு மற்றும் குதிரை சந்தை இந்த ஆண்டு நடத்த அனுமதி கிடையாது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதேநேரத்தில் பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கையும் பாதிக்கப்படாத வகையில் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டும் தீபத்திருவிழாவினை சிறப்பாக நடத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story