‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
நாகை மாவட்டம் திருமருகலை அடுத்த தோப்பு கிராமம் வடக்கு தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும், மழைக்காலத்தில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கி கொள்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை பயன்படுத்த முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கிராமமக்கள், திருமருகல்.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த கால்நடைகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் கூட்டமாக சாலையில் வலம் வருகின்றனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சாலைகளின் நடுவே படுத்து கொள்கின்றன. இதனை அறியாமல் வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகள் மீது மோதி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு தரங்கம்பாடி பகுதியில் உள்ள சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், தரங்கம்பாடி.
மழைநீர் வடிகால் வசதி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்த செங்களிபுரம் பகுதியில் உள்ள செல்வா சிட்டி நகரில் மழைநீரில் வடிகால் வசதி இல்லை. இதனால் மழைநீர் வடிவதற்கு வழியில்லாமல் அந்த பகுதியில் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மிகுந்த அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேணடும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், குடவாசல்.
Related Tags :
Next Story