ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை


ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை
x
தினத்தந்தி 5 Nov 2021 10:29 PM IST (Updated: 5 Nov 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி டிரைவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்- தம்பி உள்பட   4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 
கள்ளத்தொடர்பு
மயிலாடுதுறை அருகே மேலபட்டமங்கலம் திடல் தெருவை சேர்ந்தவர் கனகசபை. இவருடைய மகன் சதீஷ்(வயது36). பொக்லின். எந்திர டிரைவர்.  சதீசின் உறவினர் வினோத். இவருக்கும் வழுவூர் நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மனைவி மகேஸ்வரி என்பவருக்கும்  கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் தலைமறைவாகி விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
வாக்குவாதம்
இந்த பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போது வினோத்துக்கு ஆதரவாக சதீஷ் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சதீசுக்கும் மகேஸ்வரியின் உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் தீபாவளியன்று மாலை 4.30 மணியளவில் சீனிவாசபுரம் கடைவீதியில் சதீஷ் நின்று கொண்டிருந்தார். அப்போது  நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரியின் உறவினர்களான இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சினிமா பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினர். அப்போது சதீசுக்கும் இளவரசன் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
பரிதாப சாவு
இது குறித்து தகவல் அறிந்த இளவரசனின் அண்ணன் மாதவன் மற்றும் பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது மாதவன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சதீசை குத்த முயன்றார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவரை விடாமல்  ஓட, ஓட விரட்டி சென்று பிரபு, இளவரசன், ரகு, தினேஷ் ஆகியோர் சதீசை பிடித்து தாக்கினர். அப்போது மாதவன் கத்தியால் சதீசின் மார்பு மற்றும் முதுகு பகுதியில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.  இதில் பலத்த காயமடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இது குறித்து தகவல் அறிந்த சதீசின் உறவினர்கள் கொலை நடந்த பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து  சதீசின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் தீபாவளியன்று 
திருவாரூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
கைது
இந்தநிலையில் மயிலாடுதுறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சதீஷ் கொலை தொடர்பாக  நெய்க்குப்பை வடக்கு தெருவை சேர்ந்த மனோகர் மகன் மாதவன் (33), இவரது தம்பி இளவரசன் (27), நெய்க்குப்பை தோப்புத்தெருவைச் சேர்ந்த நடேசன் மகன் பிரபு (38), அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் ரகு (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர். 
 இந்த வழக்கு தொடர்பாக நெய்க்குப்பை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் தினேசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story