காப்பு கட்டுதலுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா
பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. படி ஏறி சென்ற யானையை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
பழனி:
கந்தசஷ்டி
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அவ்வாறு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற முருகப்பெருமானுக்கு 7 நாட்கள் கடும் விரதம் இருப்பார்கள்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் இன்றி திருவிழா நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முன்னதாக மலைக்கோவிலில் உச்சிக்கால பூஜைக்கு பிறகு பாரவேல் மண்டபத்தில் பிரயாசித்த யாகம் நடைபெற்றது. பின்பு கருவறையில் உள்ள விநாயகர், மூலவர், உற்சவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவாரபாலகர்கள், மயில், வேல், கொடிமரம் மற்றும் நவவீரர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் பூஜைகளை செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். காப்புகட்டும் நிகழ்ச்சிக்கு பின்பு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
சூரசம்ஹாரம்
கந்தசஷ்டி திருவிழாவுக்காக ஆண்டுதோறும் கோவில் யானை கஸ்தூரி, படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 7 மணி அளவில் யானை கஸ்தூரிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றது. யானை படியேறி சென்றதை படிப்பாதையில் சென்ற பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.
7 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 6-ம் நாளான 9-ந்தேதி சூரசம்ஹாரமும், 10-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை. அதன்படி 9-ந்தேதி காலை 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன் பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல் 10-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி அன்றும், பகல் 12:30 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story