மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஊக்கத்தொகை கேட்டு போராட்டம்
பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் ஊக்கத்தொகை வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துவது வழக்கம். இதற்காக திருஆவினன்குடி, கிரிவீதி, சண்முகநதி உள்ளிட்ட இடங்களில் முடி காணிக்கை நிலையங்கள் உள்ளன. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசின் ஊக்கத்தொகை வழங்கக்கோரி நேற்று, பழனி முருகன் கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக பணியாற்றி வரும் எங்களுக்கு மொட்டையடிக்க வசூலிக்கும் கட்டணத்தில் இருந்து பங்குத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவில்களில் கட்டணமில்லாமல் மொட்டை அடிக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், அத்துடன் கோவில் நிர்வாகம் சார்பில் ஊதியம் வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. ஆனால் 3 மாதங்களாகியும் ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டால், அரசு உத்தரவு வரவில்லை என்று பதில் அளிக்கின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி போனஸ் தரவில்லை. இதனால் தீபாவளிக்கு புத்தாடைகூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகிறோம். எனவே மாதாந்திர ஊக்கத்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி கொடுக்க வேண்டும். அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.
பின்னர் அவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மஞ்சள் நிற பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story