தியாகதுருகம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி 8 பேர் படுகாயம்


தியாகதுருகம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலி 8 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2021 10:45 PM IST (Updated: 5 Nov 2021 10:45 PM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகம் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

கண்டாச்சிமங்கலம், 

துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நொனையவாடி கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது 40). இவருடைய உறவினர் ஒருவர் தியாகதுருகம் அடுத்த கொங்கராயப்பாளையத்தில் இறந்து விட்டார். இதையடுத்து அழகேசன் காட்டுநெமிலி, நொனையவாடி கிராமங்களை சேர்ந்த தனது உறவினர்களுடன் ஒரு காரில் கொங்கராயபாளையம் சென்று துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு உறவினர்களுடன் காரில் புறப்பட்டார். காரை அழகேசன் ஓட்டினார். 
தியாகதுருகம் அடுத்த குடியநல்லூர் அருகே காப்புக்காட்டு பகுதியில் வந்தபோது, காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியபடி சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. 

2 பெண்கள் பலியான சோகம்

இதில் பலத்த காயமடைந்த காட்டுநெமிலியை சேர்ந்த காசி மனைவி பத்மா (66) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்து வலியால் அலறிய காட்டுநெமிலியை சேர்ந்த ராமர் (40), அவரது மனைவி லதா (30), அண்ணாதுரை மனைவி விஜயா (47), மற்றும் நொனையவாடியை சேர்ந்த சிவலிங்கம் (51), அவரது மனைவி அஞ்சலை (45), விசுவலிங்கம் (46), அவரது மனைவி ஜெயந்தி (35), முருகன் மனைவி வனசுந்தரி (38), அழகேசன் மனைவி தனலட்சுமி (35) ஆகியோரை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் தனலட்சுமி இறந்துவிட்டார். மற்ற 8 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்தில் காரை ஓட்டிய அழகேசன் காயமின்றி உயிர்தப்பினார். இந்த சம்பவம் குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது கார் கவிழ்ந்து 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story