பத்தலப்பல்லி மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு
பேரணாம்பட்டு அருகே ஆந்திரா, கர்நாடகா வனப்பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும், பேரணாம்பட்டு அருகே ஆந்திர மாநிலம் வீ.கோட்டா அருகே உள்ள கைகல் நீர்வீழ்ச்சியில் கனமழை பெய்ததாலும் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே உள்ள பத்தலபல்லி மலட்டாற்றில் வெள்ளம் வர தொடங்கியுள்ளது.
இதனால் சுமார் 5 அடி உயரத்திற்கு பத்தலப்பல்லி மலட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கரை புரண்டு ஓடுகிறது. மேலும் மதினாப்பல்லி மலட்டாற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நெற்பயிர்கள் சேதம்
இதனால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ளம் புகுந்தது. மசிகம் கிராமத்தை சேர்ந்த சாவித்திரி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயராக இருந்த சுமார் ¾ ஏக்கர் நெற்பயிர் சேதம் அடைந்தது.
பத்தலப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளின் வெள்ளநீர் நரியம்பட்டு ஆற்றில் கடந்து ரெட்டிமாங்குப்பம் பாலாற்றில் கலக்கிறது.
இதனாலும் ரெட்டிமாங்குப்பம் பாலாற்றில் இன்று காலை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
போக்குவரத்துக்கு தடை
இதனை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் நடந்து சென்றும், வாகனங்களிலும் சென்றனர். இருகரைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து சென்றதை அறிந்தவுடன் பேரணாம்பட்டு வருவாய்த்துறையினர் மற்றும் மேல்பட்டி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று பாலாற்றில் இரும்பு தடுப்புகளை வைத்து பேரணாம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் இடையிலான போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்தனர்.
இதனால் மேல்பட்டிக்கு மாதனூர் வழியாக குடியாத்தம், ஆம்பூர் நகரங்களுக்கு நீண்டதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சிரமமான நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Related Tags :
Next Story