மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் சங்கிலி பறிப்பு; 2 பேர் சிறையில் அடைப்பு


மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் சங்கிலி பறிப்பு; 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 6 Nov 2021 12:00 AM IST (Updated: 6 Nov 2021 12:00 AM IST)
t-max-icont-min-icon

ஆவூர் அருகே நரியப்பட்டி கிராமத்தில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆவூர்,
மூட்டு வலிக்கு மருந்து
விராலிமலை தாலுகா, ஆவூர் அருகே உள்ள நரியப்பட்டி கிராமத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அங்குள்ள வீதியில் நடந்து சென்று இங்கே யாருக்காவது சர்க்கரை நோய், மூட்டு வலி, கால் வலி இருந்தால் அதற்கு மருந்து கொடுப்பதாக கூவிக்கொண்டு சென்றனர். 
இதைப்பார்த்த அதே ஊரை சேர்ந்த பவுனம்மாள் (வயது 60) என்ற மூதாட்டி அந்த நபர்களை அழைத்து தனக்கு சர்க்கரை நோய் இருப்பதால் மூட்டு வலி, கால் வலி இருப்பதாகவும் அதற்கு மருந்து கொடுக்குமாறும் கேட்டுள்ளார். 
சங்கிலி பறிப்பு
அப்போது ஒரு திரவத்தை கொடுத்து இதை நீங்கள் குடித்தால் 2 நாட்களில் சர்க்கரை நோய் மற்றும் கால் வலி, மூட்டு வலி சரியாகிவிடும் என்று அந்த மூதாட்டியிடம் குடிக்க கொடுத்துள்ளனர். அதை குடித்த சிறிது நேரத்தில் பவுனம்மாள் மயக்கமடைந்துள்ளார். மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை அந்த ஆசாமிகள் பறித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மண்டையூர் போலீஸ் நிலையத்தில் பவுனம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப் பதிவு செய்து மூதாட்டியிடம் மயக்க மருந்து கொடுத்து தங்க செயினை பறித்து சென்ற நபர்களை தேடி வந்தார்.
சிறையில் அடைப்பு
விசாரணையில் கர்நாடக மாநிலம் சிக்பாலா மாவட்டத்தை சேர்ந்த பட்டலபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆதமூர்த்தி மகன் கோபி (34), அவரது அண்ணன் நாராயணசாமி மகன் மணி (19) ஆகியோர் நரியப்பட்டி கிராமத்திற்கு மருந்து விற்பது போல் வந்து பவுனம்மாளுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடக மாநிலம் பட்டலபள்ளி கிராமத்திற்கு சென்ற மண்டையூர் போலீசார் கோபி, மணியை கைது செய்தனர். மேலும் 5 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 2 பேரையும் கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர்.

Next Story