பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
பெட்ரோல் விலை குறைந்ததால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு வாகன ஓட்டிகள் படையெடுத்து வருகின்றனர்.
கடலூர்,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் குறைக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி வரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.82-க்கும், டீசல் ரூ.104.70-ம் விற்பனையானது. அதிகபட்சமாக குமராட்சியில் 109 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால், கடலூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.55-க்கும், டீசல் 93.54-க்கும் விற்பனையானது. அதேவேளை கடலூரை ஓட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்தில் நேற்று ரூ.94.99-க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டது. இதனால் கடலூரில் உள்ள வாகன ஓட்டிகள் புதுச்சேரிக்கு படையெடுத்தனர்.
கூட்டம்
அவர்கள் தங்கள் வாகனங்களில் உள்ள பெட்ரோல் டேங்குகளில் முழு கொள்ளளவையும் நிரப்பினர். இதனால் புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. புதுச்சேரியில் இதற்கு முன்பு பெட்ரோல் ரூ.107.84 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாததால் கடலூர் மாவட்ட வாகன ஓட்டிகள் புதுச்சேரி செல்வதை தவிர்த்தனர். தற்போது கடலூரை விட புதுச்சேரியில் விலை மிகவும் குறைவு என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் சென்றுபெட்ரோல், டீசல் போட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story