தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 6 Nov 2021 12:47 AM IST (Updated: 6 Nov 2021 12:47 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.13 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி குறைவாகும்.

கடலூர் முதுநகர், 

தீபாவளி, புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் பொது மக்கள் புத்தாடை அணிந்து, நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது வழக்கமாகும். இதற்கு மாறாக மது பிரியர்கள், பண்டிகை காலங்கள் என்றாலே விதவிதமான மதுபானங்களை வாங்கி நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு பண்டிகைகளை கொண்டாடுவார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை படுஜோராக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி 3-ந் தேதி மற்றும் நேற்று முன்தினம் மொத்தமுள்ள 147 டாஸ்மாக் மதுபான சில்லறை கடைகளிலும் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியதை காணமுடிந்தது.

குறைவு

அதன்படி மாவட்டத்தில் 3-ந் தேதி 6 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும், தீபாவளி பண்டிகை நாளான நேற்று முன்தினம் 7 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனையானது. அதாவது மாவட்டத்தில் 2 நாட்களில் மொத்தம் ரூ.13 கோடியே 73 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.
இது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனையானதை விட ரூ.1 கோடி குறைவாகும். அதாவது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்டத்தில் ரூ.14 கோடியே 83 லட்சத்து 21 ஆயிரத்துக்கு மது விற்பனையாகியுள்ளது.

காரணம் என்ன?

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் அதிகளவில் மதுபானங்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம். அதாவது சராசரியாக பண்டிகை காலங்களில் ரூ.12 கோடி முதல் ரூ.14 கோடி வரை மது விற்பனை நடைபெறும்.
ஆனால் இந்த தீபாவளி பண்டிகை நாளில் கடந்த ஆண்டை காட்டிலும் மதுபானங்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு மதுபானங்கள் விலையை உயர்த்தியதே காரணமாகும். மேலும் கடலூரில் விற்பனையாகும் மதுபானங்களை விட அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பாட்டிலுக்கு ரூ.40 முதல் ரூ.70 வரை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் கடலூர் மாவட்ட மதுபிரியர்கள், புதுச்சேரிக்கு படையெடுத்து சென்று மது அருந்தினர். அதனால் தான் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விடரூ.1 கோடி குறைவாக மது விற்பனையாகியுள்ளது என்றார்.

Next Story