பொய்கை அணை நிரம்பியது


பொய்கை அணை நிரம்பியது
x
தினத்தந்தி 6 Nov 2021 12:58 AM IST (Updated: 6 Nov 2021 12:58 AM IST)
t-max-icont-min-icon

21 ஆண்டுகளில் முதல் முறையாக பொய்கை அணை நிரம்பியது. இதனை அறிந்த விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

ஆரல்வாய்மொழி, 
21 ஆண்டுகளில் முதல் முறையாக பொய்கை அணை நிரம்பியது. இதனை அறிந்த விவசாயிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பொய்கை அணை
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே செண்பகராமன்புதூர் பகுதியில் பொய்கை அணை உள்ளது. கடந்த 2000-வது ஆண்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் இந்த அணை திறக்கப்பட்டது. அணையின் மொத்த கொள்ளளவு 42.65 அடி ஆகும். இந்த அணைக்கு சுங்கான் ஓடை, இறப்பையாறு மூலம் நீர்வரத்து வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நீர்வரத்து வரும் பகுதி சிதிலமடைந்ததால், அணைக்கு முழுமையாக தண்ணீர் செல்வது கிடையாது. இதனால் பொய்கை அணை இதுவரை முழு கொள்ளளவை எட்டாமலேயே இருந்தது.
முழு கொள்ளளவை                    எட்டியது
அணையில் அதிகபட்சமாக நீர்மட்டம் 33 அடி வரை உயர்ந்திருந்தது. இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டு ரூ.3¼ கோடியில் சுங்கான்ஓடை, இறப்பையாறு ஆகியவை சீரமைக்கப்பட்டது.
இந்தநிலையில் குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த தொடர் மழையால் பொய்கை      அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந் தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு பொய்கை அணை முழு கொள்ளளவை எட்டியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
பின்னர் தண்ணீர் மறுகால் பாய்ந்தது. 21 ஆண்டுகளில் முதல் முறையாக அணை நிரம்பியதை அறிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சுற்று வட்டார கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக வந்து அணையை பார்வையிட்டு ரசித்தனர். அப்போது விவசாயிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அணையில் மலர்தூவினர்.
மேலும், செண்பகராமன்புதூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், துணை தலைவர் தேவதாஸ், மணிகண்டன் மற்றும் விவசாயிகள் அணையை பார்வையிட வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர் அருண் சன் பிரைட், பாசன பிரிவு உதவி பொறியாளர் வின்ஸ்டன் லாரன்ஸ் ஆகியோர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
8 குளங்கள் நிரம்ப வாய்ப்பு
பின்னர் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், முதல் முறையாக பொய்கை அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் மலையில் இருந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது. அணையில் உள்ள மேட்டுக் கால்வாய் மதகை திறப்பதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அரசின் ஆணைக்காக காத்திருக்கிறோம். 
ஒரு சில நாட்களில் மேட்டு கால்வாய் மதகு திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்படும். இதன் மூலம் முப்பந்தல் அருகே உள்ள ஆத்திகுளம், லட்சுமி புதுக்குளம் உள்ளிட்ட 8 குளங்கள் நிரம்பும் என்றனர்.

Next Story