தினத்தந்தி புகார் பெட்டி
தஞ்சைமாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
ஆபத்தான மின்மாற்றி
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மெலட்டூர்- கோவத்தக்குடி சாலையில் உள்ள 2-ம் சேத்தி கிராம நிர்வாக அலுவலகம் அருகே மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி தற்போது பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும், மின்மாற்றியை சுற்றி செடி, கொடிகள வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. அதுமட்டுமின்றி, தொடர் மழை மற்றும் இயற்கை சீற்றத்தின் காரணமாக மின்மாற்றி சாய்ந்த நிலையில் உள்ளது. எனவே, மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் சாலையில் விழ வாய்ப்பு உள்ளது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றியை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-கிராமமக்கள், மெலட்டூர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
தஞ்சை மாவட்டம் வெண்டயம்பட்டி கிராமத்தில் பெரிய ஏரி பாலம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் உடைந்து அடிக்கடி குடிநீர் வெளியேறி செல்கிறது. இதன்காரணமாக புதுத்தெரு கிராமத்துக்கு குடிநீர் செல்வதில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் இன்றி சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மேற்கண்ட பகுதிக்கு தடையின்றி குடிநீர் செல்லவும், காவிரி கூட்டு குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-முருகானந்தம், வெண்டயம்பட்டி.
சாலையில் தேங்கும் மழைநீர்
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்த நெல்லடிக்காடு கிராமத்தில் உள்ள சாலையில் நடுவே பெரிய பள்ளம் உள்ளது. இதில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் மழைநீர் தேங்கி கிடப்பது தெரியாமல் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், சாலையில் மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் சாலையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், நெல்லடிக்காடு.
குப்பைகள் அகற்றப்படுமா?
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளை அடுத்த காகிதப்பட்டரை கடைவீதியில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், இறைச்சி கழிவுகளை தேடி நாய்கள் அதிகளவில் அந்த பகுதியில் குவிகின்றனர். இவை சாலையின் குறுக்கே அங்கம், இங்கும் ஓடி திரிகின்றன. இதனால் வாகன ஒட்டிகள் சிரமத்துக்கு ஆளாவது மட்டுமின்றி அடிக்கடி விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
-முத்துராமன், திருப்பனந்தாள்.
சாலை, குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்த பத்துப்புளிவிடுதி பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லை. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக சாலை வசதி இல்லாததால் மேற்கண்ட பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-விஜயகாந்த், பத்துப்புளிவிடுதி.
Related Tags :
Next Story