தூக்குப்போட்டு பெண் தற்கொலை
பேராவூரணியில் திருமணமான 2 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:
பேராவூரணியில் திருமணமான 2 மாதத்தில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்குவாதம்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சனா(வயது25). பொன்காடு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த்(28). இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தலைதீபாவளிக்காக நேற்றுமுன்தினம் இருவரும் நிரஞ்சனா வீட்டுக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு வந்துள்ளனர். பின்னர் நிஷாந்த், நிரஞ்சனாவிடம் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக சென்றார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பினார். வீட்டிற்கு தாமதமாக வந்ததை நிரஞ்சனா கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தூக்கில் பிணம்
இந்தநிலையில் நேற்று காலை நிஷாந்த் வெளியில் சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் நிரஞ்சனாவை காணவில்லை. அப்போது அருகில் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டிற்கு சென்று நிஷாந்த் பார்த்தார். அங்கு வீட்டின் கதவு உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிரஞ்சனா ஜன்னலில் தூக்கில் தொங்கினார். இதுகுறித்து நிரஞ்சனாவின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிரஞ்சனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆர்.டி.ஓ. விசாரணை
இன்று(சனிக்கிழமை) ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பின் பிரேத பரிசோதனை நடைபெறுகிறது. நிரஞ்சனா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story