மதனகோபால சுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை


மதனகோபால சுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை
x
தினத்தந்தி 6 Nov 2021 2:20 AM IST (Updated: 6 Nov 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

மதனகோபால சுவாமி கோவிலில் கேதார கவுரி பூஜை நடந்தது.

பெரம்பலூர்:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலில் பெருமாள்- தாயாருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெருமாளுக்கு திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் இமயமலையில் உள்ள கேதாரம் சிவபெருமானின் உறைவிடம் ஆகும். சக்தி ரூபமான பார்வதி சிவனை நினைத்து 21 நாட்கள் விரதம் (உபவாசம்) இருந்து சிவனில் பாதியாக (உமையொருபாகனாக) ஐக்கியமானார். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் தீபாவளியையொட்டி வரும் அமாவாசைக்கு முன்னதாக விரதம் இருந்து அமாவாசை தினத்தில் விரதத்தை நிறைவு செய்து அம்பாளை பூஜை செய்தால் சிவசக்தி அருளால் வீட்டில் சகல சவுபாக்கியங்கள் பெருகும், கணவன்-மனைவி இடையேயும், குடும்பத்திலும் நல்லுறவு மேம்படும் என்பது ஐதீகம் ஆகும்.
பெரம்பலூரில் ஆண்டுதோறும் தீபாவளி அமாவாசையன்று மதனகோபாலசுவாமி கோவிலில் தாயார் சன்னதியில் கேதார கவுரி விரத பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினமும் கேதார கவுரி பூஜை விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு அம்பாள் சிலை அக்ரகாரத்தில் உள்ள கோவில் பரம்பரை ஸ்தானீகர் நாராயணன் அய்யர் இல்லத்தில் அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்து மரகதவல்லித்தாயார் சன்னதிக்கு எடுத்து வரப்பட்டது. அங்கு கலசம் ஆவாகனம் செய்யப்பட்டு, விநாயகர் பூஜை, அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது. கேதாரகவுரி பூஜையின் மகத்துவம் குறித்து பக்தர்களுக்கு விளக்கப்பட்டது. பூஜையை மணிகண்டன் அய்யர் மற்றும் எளம்பலூர் சமத்துவபுரம் ரகுராமன் அய்யர் குழுவினர் நடத்தினர்.
4 பகுதிகளாக நடந்த கேதார கவுரி பூஜையில் ஏராளமான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு தேங்காய், பழம் நிவேதனம் செய்து அம்பாளை வழிபட்டனர். பூஜையின்போது மஞ்சள் சரடு வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அதனை பெண்கள் தங்களது வீட்டிற்கு எடுத்துச்சென்று வலது கையில் அணிந்து கொண்டனர்.

Next Story