மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி
மின்வாரிய அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட திருச்சி அ.ம.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
திருச்சி
திருச்சி சுந்தர் நகர் ரங்கா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சின்ன கிருஷ்ணன். இவரது மகன் செந்தில்குமார். இவர் தனது சகோதரரின் மகனின் வேலைக்காக திருச்சி புத்தூரை சேர்ந்த கல்லணை குணா என்கிற நாகராஜன் (வயது 45) என்பவரை அணுகினார். இவர், திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி ஆவார்.
அப்போது செந்தில்குமாரிடம் நாகராஜன், தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சம் பேசி கடந்த 2017-ம் ஆண்டு ரூ.5 லட்சம் முன்பணமாக காசோலை மூலம் வாங்கினார். பின்னர் மற்றொரு தவணையாக ரூ.7 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
அ.ம.மு.க. நிர்வாகி கைது
ஆனால், இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. ரூ.12 லட்சத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து செந்தில்குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் வழக்குப்பதிந்து, அ.ம.மு.க. நிர்வாகியான நாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
Related Tags :
Next Story