காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பூசாரி பலி


காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பூசாரி பலி
x
தினத்தந்தி 6 Nov 2021 2:30 AM IST (Updated: 6 Nov 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

துறையூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பூசாரி ஒருவர் உயிரிழந்தார்.

துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்துள்ள சேனப்பநல்லூர் ஊராட்சியில் ஏரிக்கரை உள்ளது. இங்குள்ள செல்லாயி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தவர் வாழியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஹரிராஜ்(வயது 40). இவருக்கு  ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி இவர் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்றார். பின்னர் பூஜைகளை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்குள்ள சேனப்பநல்லூா் ஏரி வாய்க்காலில் தரைப்பாலம் இல்லாததால் அதில் இறங்கி கடந்து செல்ல முயன்றார். ஆனால், கொல்லிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மழைநீர் அதிகளவு ஓடியது.
வெள்ளத்தில் சிக்கி பலி
இந்த காட்டாற்று வெள்ளத்தில் ஹரிராஜ் சிக்கி அடித்து செல்லப்பட்டார். நேற்று காலை வரை அவர் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் கோவிலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு அவர் இல்லாததால் பதற்றம் அடைந்தனர். பின்னர் அவரை தீவிரமாக தேடிய போது ஹரிராஜ் அணிந்திருந்த வேட்டி மட்டும் வாய்க்காலில் உள்ள ஒரு குச்சியில் சிக்கி கிடந்தது.
ஆகவே, ஹரிராஜ் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி இருக்கக்கூடும் என்று நினைத்த உறவினர்கள், இதுகுறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அதிகாரி அறிவழகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி ஹரிராஜை தேடினர். சுமார் 4 மணி நேர தேடலுக்கு பிறகு 2 கிலோ மீட்டர் தொலைவில் ஹரிராஜை பிணமாக மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி கோவில் பூசாரி உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story