தந்தையை கொலை செய்த 2 மகன்கள் கைது
தந்தையை கொலை செய்த 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்
சமயபுரம்
திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). விவசாயி. இவருக்கு சாந்தி (45) என்ற மனைவியும், அரவிந்த்குமார் (29), வினோத்குமார் (19) ஆகிய 2 மகன்கள். சுப்பிரமணிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனால் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சுப்பிரமணி அப்பெண்ணுடன் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சாந்தி, தனது 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணிக்கும், அவரது மகன்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரும் இரும்பு குழாயால் தந்தை சுப்பிரமணியை ஓங்கி அடித்துள்ளனர்.
தந்தை கொலை
இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வினோத்குமார் மற்றும் அரவிந்த்குமார் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். தந்தையை மகன்களே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story