சேலம் அருகே மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி
சேலம் அருகே மழைக்காக மரத்தடியில் ஒதுங்கி நின்றபோது மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியானார்கள்.
கெங்கவல்லி
பலத்த மழை
வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருமணிமுத்தாறு, வசிஷ்டநதி, சரபங்கா ஆறு போன்றவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஏரி, குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது.
இந்தநிலையில் நேற்று மதியம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது கெங்கவல்லி அருகே உள்ள ஆனியம்பட்டி ஊராட்சி சாவடி தெருவை சேர்ந்த செல்லப்பன் மனைவி ஜெயக்கொடி (வயது 55), 7-வது வார்டு முத்துக்கண்ணு மனைவி அலமேலு ஆகியோர் சோளக்காட்டில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மின்னல் தாக்கி பலி
அவர்கள் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றனர். அப்போது அவர்களை மின்னல் தாக்கியது. இதில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு கெங்கவல்லி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர்.
அங்கு டாக்டர்கள் அவர்களை பரிசோதித்து விட்டு ஜெயக்கொடி, அலமேலு ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தாசில்தார் முருகையன், போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகேசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சோகம்
மின்னல் தாக்கி பலியான ஜெயக்கொடிக்கு 2 மகன்களும், அலமேலுவுக்கு ஒரு மகன், மகளும் உள்ளனர். கெங்கவல்லி அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story