நகராட்சியில் இருந்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் - அரசிதழ் வெளியீடு


நகராட்சியில் இருந்து தாம்பரத்தை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அவசர சட்டம் - அரசிதழ் வெளியீடு
x
தினத்தந்தி 6 Nov 2021 9:57 AM IST (Updated: 6 Nov 2021 9:57 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரத்தை நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தி பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம், தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன.

இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 அவசர சட்டங்களை கடந்த அக்டோபர் 20-ந் தேதி வெளியிட்டார். அதில், 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது சட்டசபையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், கடலூர், காஞ்சீபுரம், சிவகாசி மற்றும் கரூர் ஆகிய சிறப்பு நிலை நகராட்சிகளுடன், அவற்றில் அருகில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகள் இணைக்கப்பட்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.

தற்போது சட்டசபை கூட்டத்தொடர் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இதற்கான அவசர சட்டங்கள் பிறப்பிக்கப்படுகின்றன. இவை உடனடியாக அமலுக்கு வருகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தாம்பரம், கும்பகோணம் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது தொடர்பாகவும் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதில் தாம்பரம் நகராட்சியை மாநகராட்சியாக உயர்த்துவதற்கான அவசர சட்டத்தை கவர்னர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ளார். அதுதொடர்பான அரசிதழ் 3-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் அவசர சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு சேர்க்கப்பட்ட பகுதிகள் ஆகியவை தாம்பரம் மாநகராட்சிக்குள் இடம் பெறும்.

இந்த புதிய மாநகராட்சிக்கான மேயர், வார்டு உறுப்பினர்கள், நிலைக்குழு, வார்டு கமிட்டி, ஆணையர் நியமனம் மற்றும் சில பதவிகளுக்கான தேர்தல் குறித்த அறிவிப்பு, இந்த அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

Next Story