மந்தைவெளியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு
மந்தைவெளியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை,
சென்னை மந்தைவெளி ராமகிருஷ்ணா மடம் சாலையில் நேற்று காலை வழக்கம்போல் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்த சாலையில் திடீரென 5 அடி அகலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பள்ளம் விழுந்த பகுதியில் போக்குவரத்தை மாற்றம் செய்தனர். மேலும் இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக விரைந்து சென்று பள்ளத்தை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சாலையில் அடியில் பதிக்கப்பட்டிருந்த கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக அதில் இருந்த நீர் வெளியேறி மண் அறிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளம் சரி செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார். திடீரென சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் மந்தைவெளி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த பின்னர் மீண்டும் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
Related Tags :
Next Story