திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு; தரைப்பாலங்கள் சேதம்
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் சேதம் அடைந்தன.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று இருந்தது. இதன் வழியாக மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் செல்ல இந்த பாலத்தின் வழியாக செல்வர்.
இந்த நிலையில் அம்மம்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், பூண்டி நீர்த்தேக்கத்தின் வழியாக உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. வெங்கல் போலீசார் கொசஸ்தலை ஆற்றை யாரும் கடந்து செல்ல கூடாது என்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த பாலம் சேதம் அடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப்பாதைகளில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று விரைந்து வந்து சேதம் அடைந்த பாலத்தை பார்வையிட்டார். மேலும், போர்க்கால அடிப்படையில் தரைப்பாலத்தை சீரமைத்து போக்குவரத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரமேஷ், தாசில்தார்கள் செந்தில்குமார், ராமன் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் இளங்கோவன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பேரம்பாக்கத்தில் இருந்து மணவூர் கிராமம் செல்லும் சாலையில் பாகசாலை கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக பாலத்தின் மீது மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக நேற்று அந்த பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
அதேபோல திருவள்ளூரை அடுத்த மணவூர்- கடம்பத்தூர் சாலையில் குப்பம் கண்டிகை கிராமத்தில் கொசஸ்தலை ஆறு உள்ளது. இந்த கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலம் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் அடைந்தது.
இருப்பினும் ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள் தரைப்பாலத்தை கடந்து செல்கின்றனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் இந்த தரைப்பாலத்தில் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.
எனவே போலீசார் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story