ஒரகடம் அருகே டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் வட மாநில வாலிபர் கைது
ஒரகடம் அருகே டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் வட மாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வாரணவாசி பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 43), கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் ராம் (42). இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தனர். வழக்கம் போல் கடந்த மாதம் 4-ந்தேதி இரவு விற்பனை முடிந்தவுடன் கடையை பூட்டி விட்டு விற்பனையாளர்கள் துளசிதாஸ் மற்றும் ராம் இருவரும் கடையின் பின்புறம் உள்ள மதுபான கூடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை எடுக்க சென்றனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் துளசிதாசை கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொலை செய்தனர். தடுக்க முயன்ற ராமுவையும் குத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயத்துடன் கிடந்த ராமுவை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த துளசிதாசின் உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்போன் எண், மற்றும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து புலன் விசாரணை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் குமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.
முதலில் கூர்மையான ஆயுதத்தால் டாஸ்மாக் ஊழியர்களை குத்தப்பட்டதாக கூறிவந்த நிலையில், ராமு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆஸ்பத்திரியில் ராமுவுக்கு டாக்டர்கள் எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் செய்து பார்த்ததில் நுரையீரல் பகுதியில் துப்பாக்கி தோட்டா போன்ற வடிவில் ஒரு பொருள் இருந்துள்ளது. இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக ராமுவை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு ராமுவுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் நுரையீரலில் சிக்கியிருப்பது துப்பாக்கி தோட்டா என்பது தெரியவந்தது. இதன் மூலம் டாஸ்மாக் ஊழியரை தூப்பாக்கியால் சுட்டுள்ளது தெரிவந்தது. போலீசார் குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பிகார் மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு துப்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து ஒரகடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்திரன்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை பிடிக்க பீகார் மாநிலத்திற்கு சென்றனர். அந்த பகுதியில் 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து அந்த மாநில போலீசார் உதவியுடன் டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் சைன்பூர் அவங்ஹாரா கிராமத்தை சேர்ந்த உமேஷ் குமார் (25), என்பவரை கைது செய்தனர். அவரை ஒரகடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது செய்யப்பட்ட உமேஷ்குமாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். டாஸ்மாக் ஊழியர் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story