2 பேரிடம் 18 பவுன் நகை அபேஸ்


2 பேரிடம் 18 பவுன் நகை அபேஸ்
x
தினத்தந்தி 6 Nov 2021 4:58 PM IST (Updated: 6 Nov 2021 4:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் போலீஸ் போல் நடித்து நடந்து சென்ற 2 சகோதரிகளிடம் 18 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு 2 பேர் தப்பினார்கள்.

திருப்பூர்
திருப்பூரில் போலீஸ் போல் நடித்து நடந்து சென்ற 2 சகோதரிகளிடம் 18 பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு 2 பேர் தப்பினார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சகோதரிகள்
திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியின் மனைவி சரசு (வயது 66). இவருடைய தங்கை சாந்தாமணி (64). இவர்கள் இருவரும் தங்களின் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை சரசுவும், சாந்தாமணியும் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக குமார் நகர் 60 அடி ரோட்டில் நடந்து வந்தனர்.
காலை 10 மணி அளவில் குமார்நகர் சந்திப்பு அருகே 60 அடி ரோட்டில் வந்தபோது, வாலிபர் ஒருவர் இருவரையும் தடுத்து நிறுத்தினார். போலீஸ்காரர் என்று கூறி 2 பேரிடம் பேச்சுக்கொடுத்தார். பின்னர் அதிகாரி அழைப்பதாக கூறி 2 பேரையும் சிறிது தூரம் அழைத்துச்சென்று அங்கு இருசக்கர வாகனத்தில் காத்திருந்த டிப்-டாப் வாலிபரிடம் பேச வைத்தார்.
போலீஸ் போல் நடித்தனர்
அந்த வாலிபரோ, இவ்வளவு நகைகளை போட்டு நடந்து வருகிறீர்கள். திருடர்கள் அதிகம் உள்ள பகுதியில் இப்படி நகைகளை அணிந்து செல்லக்கூடாது. உடனடியாக கழற்றிக்கொடுங்கள். பைக்குள் வைத்து தருகிறேன். அப்படியே கொண்டு செல்லுங்கள், முககவசத்தை சரியாக அணியுங்கள் என்று போலீசார் போல் அறிவுரை கூறினார்கள். இதை நம்பிய சரசுவும், சாந்தாமணியும் தாங்கள் அணிந்திருந்த நகையை கழற்றி கொடுத்தனர். அதன்படி சரசு, 4 பவுன் வளையல்கள், 6 பவுன் தாலிக்கொடி ஆகியவற்றையும், சாந்தாமணி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியையும் கழற்றி கொடுத்தனர்.
நகைகளை ஒரு பைக்குள் வைத்து 2 பேரிடம் கொடுத்து விட்டு 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் பறந்தனர். அதன்பிறகு சரசு பையை திறந்து பார்த்தபோது அதற்குள் நகைகள் எதுவும் இல்லை. அதன்பிறகே போலீசார் போல் நடித்து தங்களை ஏமாற்றி நகைகளை அந்த வாலிபர்கள் அபேஸ் செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. உடனடியாக திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த ஆசாமிகள் இந்தி, தமிழ் கலந்து பேசியுள்ளனர். இதனால் வடமாநில வாலிபர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
18 பவுன் நகை அபேஸ்
அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் போல் நடித்து 18 பவுன் நகையை 2 வாலிபர்கள் அபேஸ் செய்து விட்டு தப்பிய சம்பவம் திருப்பூரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story