சூறைக்காற்றுடன் பலத்த மழை: பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது
சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது.
கொள்ளிடம்:-
சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பழையாறு துறைமுகத்தில் விசைப்படகு உடைந்து நொறுங்கியது.
மீன்பிடி துறைமுகம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தில் இருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபர் படகுகள், 250 நாட்டுப்படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகிறார்கள். அனைத்து விசைப்படகுகளும் பழையாறு துறைமுகத்தில் படகு அணையும் தளத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு படகு அணையும் தளம் மணல் மேடாகி விட்டது. இதன் காரணமாக அங்கு ஒரு சில படகுகளை மட்டுமே மீனவர்கள் நிறுத்தி வைத்து வருகின்றனர். மற்ற படகுகளை சற்று தூரத்தில் நிறுத்தி வைத்து வருகின்றனர்.
விசைப்படகு நொறுங்கியது
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அப்பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. துறைமுக பகுதியில் அலையின் தாக்கமும் இருந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இதில் பழையாறு சுனாமி நகரை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 60) என்பவருக்கு சொந்தமான விசைப்படகு உடைந்து நொறுங்கியது.
மேலும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 விசைப்படகுகள் சேதம் அடைந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நேற்று காலை உடைந்த படகை மற்ற படகுகளின் உதவியுடன் கயிறு கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். படகு சேதம் அடைந்து இருப்பதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ராஜேந்திரன் வேதனையுடன் கூறினார்.
மேம்படுத்த வேண்டும்
இதுகுறித்து அப்பகுதி விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் மீனவர்கள் கூறுகையில், ‘பழையாறு படகு அணையும் தளம் தற்போது மணல் மேடாகி உள்ளதால் விசைப்படகுகளை நிறுத்த முடியவில்லை. துறைமுகத்தில் இருந்து சற்று தொலைவில் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. படகுகளை நங்கூரம் பாய்ச்சி நிறுத்த வேண்டிய சூழலும் உள்ளது.
காற்று வீசும்போது படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதம் அடைகின்றன. எனவே படகு அணையும் தளத்தை மேம்படுத்த வேண்டும்’ என்றனர்.
மீன்பிடிக்க செல்லவில்லை
இந்த நிலையில் பழையாறு துறைமுகத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் சண்முகம், மீன்பிடி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது பழையாறு படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் மதுரைவீரன் மற்றும் கிராம தலைவர்கள், விசைப்படகு உரிமையாளர்கள் உடன் இருந்தனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.
Related Tags :
Next Story