வராக நதியில் வேடிக்கை பார்த்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் மீட்பு


வராக நதியில் வேடிக்கை பார்த்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் மீட்பு
x
தினத்தந்தி 6 Nov 2021 7:18 PM IST (Updated: 6 Nov 2021 7:18 PM IST)
t-max-icont-min-icon

வராக நதியில் வேடிக்கை பார்த்தபோது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவர் உடல் மீட்கப்பட்டது.

தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள மேல்மங்கலம் அக்ரஹாரத்தில் வித்யபாரதி வேதபாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மேல்மங்கலத்தில் உள்ள வராக நதியில் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 
நேற்று முன்தினம் வேதபாடசாலையில் படித்து வரும் மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ்பாபு மகன் சுந்தரநாராயணன் (வயது 19), சென்னை திருவான்மியூரை சேர்ந்த சுவாமிநாதன் மகன் மணிகண்டன் (21), அஸ்வின் குமார், அய்யப்பன், தர்ம முனீஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றனர். அப்போது அஸ்வின் குமார் மட்டும் கரையில் நின்றார். மற்ற 4 பேரும் வராக நதியில்  இறங்கினர். 
இந்தநிலையில் திடீரென ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதையடுத்து அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அய்யப்பனையும், தர்ம முனீஸ்வரனையும் மீட்டனர். மற்ற 2 ேபரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். 
உடல் மீட்பு
இதுகுறித்த தகவலின்பேரில் பெரியகுளம் தீயணைப்பு படையினர் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து தீயணைப்பு படையினர் நேற்று 2-வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுந்தரநாராயணனின் உடல் ஆற்றின் கரையோரமாக ஒதுங்கி கிடந்தது. அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மணிகண்டன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரை தேடும் பணி இன்று(ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக தொடரும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story