பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்


பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 6 Nov 2021 7:35 PM IST (Updated: 6 Nov 2021 7:35 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் மழையால் புல்வெளி மைதானம் சேறும், சகதியுமானது.

ஊட்டி

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் மழையால் புல்வெளி மைதானம் சேறும், சகதியுமானது.

மலர்களை ரசித்தனர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஊட்டியில் தங்களது குடும்பத்தினருடன் கழிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் வந்து கொண்டே உள்ளனர். இதனால் ஊட்டி-குன்னூர் சாலையில் அவ்வப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நேற்று நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் மலர் மாடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்துக்குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். 

சேறும், சகதிமாக மாறியது

அங்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால், சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியானது. தொடர்ந்து கல்லாகிய மரம், இத்தாலியன் பூங்கா மற்றும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்களை கண்டு ரசித்தனர். செல்பி ஸ்பாட்டில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

தொடர் மழை காரணமாக பெரிய புல்வெளி மைதானம் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் புல்வெளிகளில் அமர்ந்து பூங்காவை கண்டு ரசிக்கவோ அல்லது குடும்பத்துடன் ஓய்வு எடுக்கவோ முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். இதேபோல் ஊட்டி ரோஜா பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா தலங்களில் நுழைவு டிக்கெட் பெறவும், உள்ளே சென்று வரவும் நுழைவுவாயில் பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. 

போக்குவரத்து பாதிப்பு

சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தந்ததால் ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பு, கலெக்டர் அலுவலக சாலை, கமர்சியல் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வாகன நிறுத்துமிடங்கள் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

இது மட்டுமின்றி சூட்டிங்மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி சுற்றுலா தலங்களுக்கு சென்றவர்கள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டுச்சென்றனர். இதனால் ஊட்டி-கூடலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு காலதாமதமாக சென்றனர்.


Next Story