புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 6 Nov 2021 8:00 PM IST (Updated: 6 Nov 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி


சுகாதார சீர்கேடு

கோவை ராமநாதபுரம் 80 அடி சாலையில் சர்ச் ரோட்டின் அருகே குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அங்கு இருந்த குப்பை தொட்டிகளை காணவில்லை. மேலும் அங்கு மாநகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ளாமல் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

ஆர்.ரத்தினசபாபதி, கோவை.

திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு

கோவை நகரில் நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சந்தேகப்படும்படியான ஆசாமிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே போலீசார் மெயின் ரோடுகளில் ரோந்து வருவதுடன், சிறிய குடியிருப்பு சாலைகளிலும் நள்ளிரவில் ரோந்து வந்து குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஷோபனா, பீளமேடு.

மழைநீர் கால்வாய் இல்லை

மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சி சிராஜ் நகரில் கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையோரம் செல்கிறது. மேலும் தற்போது மழையும் பெய்து வருவதால், தேங்கி கிடக்கும் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கால்வாய் அமைப்பதோடு தற்போது தேங்கி கிடக்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும்.

உபைதூர் ரகுமான், சிராஜ் நகர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

கோவை பி.என்.புதூர் அருகே கோகுலம் காலனி பகுதியில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. அந்த தொட்டியில் குப்பைகள் நிரம்பி வழிகிறது. அது உடனுக்குடன் அகற்றப்படாததால், தொட்டிக்கு வெளியே பொதுமக்கள் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ், பி.என்.புதூர்.


பொது கழிப்பிடம் அகற்றம்

தொண்டாமுத்தூர் சந்தைபேட்டையில் பொது கழிப்பிடம் இருந்தது. தற்போது அங்கு பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளதால், அந்த கழிப்பிடத்தை அகற்றிவிட்டார்கள். இதனால் அங்கு வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த இடத்தில் கழிப்பிட வசதியை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்.

சுப்பிரமணியம், தொண்டாமுத்தூர்.

கடும் துர்நாற்றம்

கோவை மாநகராட்சி 55-வது வார்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகில் குப்பைகளை கொட்டக்கூடாது என்று பதாகை வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த பதாகைக்கு கீழ் பகுதியிலேயே தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சியின் எச்சரிக்கை அலட்சியப்படுத்தப்பட்டு உள்ளது. குவிந்து கிடக்கும் குப்பைகளால் அந்த இடத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துகுமார், பாப்பநாயக்கன்பாளையம்.


மதுப்பிரியர்கள் தொல்லை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரிமலையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் பி.ஏ.பி. வாய்கால் முன்பு பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையில் மாலை நேரத்தில் சில மது பிரியர்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்து போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமரன், சுல்தான்பேட்டை.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சுல்தான்பேட்டையில் இருந்து செலக்கரிச்சல், சூலூர் வழியாக கோவைக்கு குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் பஸ் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையை போக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மந்திராசலம், சுல்தான்பேட்டை.

குண்டும், குழியுமான சாலை

கூடலூரில் இருந்து மைசூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி பஜார் உள்ளது. இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக மாறி வாகன போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

நாராயணன், கூடலூர்.

அடிக்கடி மின்தடை

மதுக்கரை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கோவைப்புதூர், அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே மின்தடையை தவிர்க்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.

சுந்தரமூர்த்தி, கோவைப்புதூர். 

சேறும், சகதியுமான மண்சாலை

கோவை மாநகராட்சி 99-வது வார்டு கோணவாய்க்கால்பாளையத்தில் நூலகத்துக்கு செல்லும் மண்சாலை மழையால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் முன்வர வேண்டும்.

முத்து, கோணவாய்க்கால்பாளையம்.

Next Story