திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம்
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி திருவிழா
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் மூலவர் மற்றும் சண்முகருக்கு உச்சிகால பூஜை நடந்த பின்னர் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகா தேவர் சன்னதி முன்பு வந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
சிறப்பு அபிஷேகம்
மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு மஞ்சள், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி யாகசாலையை சென்றடைந்தார்.
விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன், கோவிலுக்கு முதலில் வந்த 5 ஆயிரம் பக்தர்களும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 5 ஆயிரம் பக்தர்களும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நாளை மறுநாள் சூரசம்ஹாரம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 2-வது ஆண்டாகவும் சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி எளிமையாக நடைபெற உள்ளது. 7-ம் திருநாளான 10-ந்தேதி (புதன்கிழமை) இரவில் சுவாமி-தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
6, 7-ம் திருவிழா நாட்களில் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் யூ-டியூப் இணையதளத்திலும், உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story