இலவச அரிசி, சர்க்கரை விரைவில் வழங்கப்படும் -ரங்கசாமி உறுதி
தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை விரைவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரி, நவ.6-
தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட இலவச அரிசி மற்றும் சர்க்கரை விரைவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
இலவச அரிசி- சர்க்கரை
தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். கடந்த காலங்களில் இலவச பொருட்களுக்கான பணம் மட்டுமே பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது.
ஆனால் இந்த முறை இலவச அரிசி மற்றும் சர்க்கரை ஆகியன ரேஷன்கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார். இதற்கிடையே மூடிக்கிடக்கும் ரேஷன்கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை வழங்க கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒப்புதல் அளித்தார்.
எதிர்பார்ப்பு
இதைத்தொடர்ந்து ரேஷன்கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு வழங்க தேவையான அரிசி, சர்க்கரையை கொள்முதல் செய்ய டெண்டரும் விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் நடந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகையும் முடிந்துவிட்டது.
தீபாவளிக்கு அறிவிக்கப்பட்ட பொருட்களை பண்டிகைக்கு முன்னதாக வழங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனால் இலவச பொருட்கள் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
விரைவில் வழங்கப்படும்
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
தீபாவளி பண்டிகைக்கு இலவச அரிசி, சர்க்கரை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான பொருட்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்து விரைவில் இலவச பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
Related Tags :
Next Story