சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளதால் வீடூர் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்பதால் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கனூர், நவ.6-
நீர்மட்டம் 30 அடியாக உயர்ந்துள்ளதால் வீடூர் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம் என்பதால் சங்கராபரணி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 அடியை எட்டியது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் 2,200 ஏக்கரும், புதுச்சேரி மாநிலத்தில் 1,000 ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வீடூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணை 30 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு கருதி அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கப்படலாம்.
வெள்ள அபாய எச்சரிக்கை
அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சங்கராபரணி ஆறு வழியாக விழுப்புரம் மாவட்டத்தை கடந்து புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, செட்டிப்பட்டு, கைக்கிளப்பட்டு, சுத்துக்கேணி, குமராபாளையம், செல்லிப்பட்டு, வில்லியனூர் பகுதி வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கும். வீடூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் மேற்கண்ட கிராமங்களுக்கு புதுவை அரசு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதிகளை பார்வையிட்டனர். பின்னர் கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, குமராபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தண்டோரா மற்றும் ஒலிபெருக்கி வாயிலாக ஆடு மாடுகளை ஆற்றுப் பகுதியில் மேய்க்க வேண்டாம், நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர் ஆணையர் எழில்ராஜன் வீடூர் அணையை பார்வையிட்டு, அதன்நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அணையின் நீர்மட்டம் 30 அடியை தாண்டியதால் எந்நேரமும் அணை திறக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story