மணலாற்று தரைப்பாலம் மூழ்கியது 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கல்வராயன்மலையில் பெய்த பத்த மழையால் மணலாற்று தரைப்பாலம் மூழ்கியதால் 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது
கச்சிராயப்பாளையம்
தரைப்பாலம் மூழ்கியது
கல்வராயன் மலை பகுதியில் பலத்த மழைபெய்து வருகிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கோமுகி அணையும் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறு, ஓடை, கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை பார்க்க முடிகிறது. தொரடிப்பட்டு மணலாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுவதை அடுத்து அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியது.
போக்குவரத்து துண்டிப்பு
இதனால் மேல்பச்சேரி, சின்ன திருப்பதி, தொரடிப்பட்டு, வண்டகாட்பாடி, நாரணபட்டி, ஏற்றப்பட்டி, எழுத்தூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சிலர் வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தை கடந்து செல்ல முயன்றனர். குறிப்பிட்ட தூரம் சென்றதும் அவர்களால் மேற்கொண்டு ஆற்றை கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். இதையடுத்து அங்குவந்த சில ஆண்கள் ஆற்றில் இறங்கி வெள்ளத்தில் தவித்தவர்களை கரைக்கு மீட்டு வந்தனர்.
மேம்பாலம் கட்ட வேண்டும்
இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் மணலாற்று தரைப்பாலம் மூழ்கும்போது கொட்ட புத்தூர் வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி கிராமங்களுக்கு சென்று வர வேண்டி இருப்பதால் தரைப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story