ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 6 Nov 2021 10:21 PM IST (Updated: 6 Nov 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

ஜோலார்பேட்டை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏலகிரி மலையில் குவிந்தனர்.

ஏலகிரி மலை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.  தமிழகத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. 

இங்கு எப்போதும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். 

மேலும் ஏலகிரி மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவு சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் இயற்கையின் எழிலில் அழகை ரசித்துக்கொண்டு மலை மீது பயணம் மேற்கொள்கின்றனர். 

மேலும் இங்குள்ள இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, படகுத்துறை, முருகன் கோவில், நிலாவூர் கதவ நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

 குறிப்பாக விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

 இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் ஏலகிரி மலையில் குவிந்தனர். 

இங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும், புங்கனூர் ஏரி படகுத்துறையில் படகில் சவாரி செய்தும் செல்பி எடுத்தும் உற்சாகம் அடைந்தனர். 

மேலும் இங்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பழ வகைகள், இனிப்பு வகைகள், சாக்லேட்டுகள் போன்றவைகளை சுற்றுலா பயணிகள் வாங்கி உண்டு மகிழ்கின்றனர். 

ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தனியார் பொழுதுபோக்கு கூடங்களும் அதிகளவில் உள்ளதால் தங்களது குடும்பத்தினருடன் சென்று சாகச போட்டிகள், பறவைகள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு கூடங்களை கண்டு ரசித்தனர்.


Next Story