செஞ்சி பகுதியில் பலத்த மழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி சங்கராபரணி ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை


செஞ்சி பகுதியில் பலத்த மழை:  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி சங்கராபரணி ஆற்று தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை
x

செஞ்சி பகுதியில் பெய்த பலத்த மழையால் செம்மேடு கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சங்கராபரணி ஆற்று தரைப்பாலத்தில் தண்ணீர் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

செஞ்சி,

செஞ்சி பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. 


இதில் செம்மேடு கிராமத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் ஆகியோர் பொக்லைன் எந்திரம் மூலம் வாய்க்காலில் உள்ள தடுப்புகளை அகற்றி தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 ஊருக்கு அருகில் உள்ள ஏரியின் நீர் வரத்து வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். 

போக்குவரத்து தடை

மேலும் செஞ்சியில் இருந்து மேலச்சேரி வழியாக செல்லும் வராக நதி தரை பாலத்திலும் தண்ணீர் அதிகமாக செல்வதால் அங்கு செஞ்சி போலீசார் தடுப்பு கட்டைகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். 

இதேபோல் செஞ்சியில் இருந்து சந்தை மேடு வழியாக மேல்களவாய் செல்லும் சாலையில் உள்ள சங்கராபரணி ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்குள்ள தரைபாலத்திலும் போக்குவரத்தை தடை செய்யப்பட்டது. 

இதனால் மேல்களவாய் உள்ளிட்ட கிராமங்களுக்கு சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

தீவிர கண்காணிப்பு

தென்புத்தூர் அருகே மொழியனூர் வழியில் செல்லும் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணை நிரம்பி வழிகிறது. இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர். 


மேலும் மழையால் சேதங்களை தடுக்க செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், தாசில்தார் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story