டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன


டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன
x
தினத்தந்தி 6 Nov 2021 10:56 PM IST (Updated: 6 Nov 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

மதினாப்பல்லி மலட்டாற்றில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன.

பேரணாம்பட்டு

மதினாப்பல்லி மலட்டாற்றில் டிரான்ஸ்பார்மர், மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன. 

வெள்ளப்பெருக்கு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒட்டியுள்ள ஆந்திர மற்றும் கர்நாடக வனப்பகுதிகளில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பரவலாக பெய்து வருகிறது.

 இதனால் ஆந்திரா மாநிலத்தில் கைகல் நீர்வீழ்ச்சி, கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக எல்லையான பேரணாம்பட்டு அருகே பத்தலப்பல்லி வனப்பகுதியான ராயலுகுண்டுவிற்கு அதிகளவு நீர்வரத்து வந்துள்ளது. 

இதனால் பத்தலப்பல்லி மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மதினாப்பல்லி மலட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

நேற்று  இரவு முதல் இன்று காலை வரை பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுமார் 31 மில்லிமீட்டர் மழை பெய்து பதிவாகியுள்ளது. 

மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்டன

மதினாப்பல்லி மலட்டாற்றில் பேரணாம்பட்டு, ஆம்பூர் நகராட்சிகளுக்கும், மசிகம், சின்னதாமல் செருவு ஆகிய ஊராட்சிகளுக்கும் மொத்தம் 14 கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது

தலைமை நீரேற்று நிலையங்களுக்கான மும்முனை மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர், விவசாய நிலங்களுக்கு செல்லும் மின்கம்பங்கள் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ளன.

 மதினாப்பல்லி மலட்டாற்றில் தொடர்ந்து மணல் எடுக்கப்பட்டு வருவதால் ஆங்காங்கே பள்ளங்கள் நிறைந்த காணப்படுகின்றன.

இந்த வெள்ளப்பெருக்கினால் ஒரு டிரான்ஸ்பார்மர் மற்றும் மும்முனை மின் இணைப்பு செல்லும் மொத்தம் 8 மின்கம்பங்கள் சாய்ந்து அடித்துச் செல்லப்பட்டன.

மின் இணைப்பு துண்டிப்பு

இதனால் மசிகம், சிடிசெருவு, பெரிய தாமல்செருவு, பத்தலப்பல்லி கிராமங்களுக்குச் செல்லும் மின்பாதை இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

 மேலும் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாசனம் செய்ய முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இதே போன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் கம்பங்கள் அடித்து செல்லப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கினால் அடித்து செல்லப் பட்ட மின்கம்பங்களை சீரமைத்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பேரணாம்பட்டு அருகே ரெட்ட மாங்குளம் பாலாற்றில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் தொடர்ந்து இரண்டாவது நாளாக போக்குவரத்து  முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. 

இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் மாற்று பாதைகளான மாதனூர், பேரணாம்பட்டு வழியாக குடியாத்தம், ஆம்பூர் இடையில் நீண்ட தூரம் பயணம் செய்து தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட்டனர்.

Next Story