திண்டுக்கல் அருகே அ/தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து; கூலித்தொழிலாளி கைது
திண்டுக்கல் அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக கூலித்தொழி லாளியை போலீசார் கைது செய்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக கூலித்தொழி லாளியை போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்
திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டியை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 56). ஆத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரான இவர், பித்தளைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
நேற்று இவர், தனது மோட்டார் சைக்கிளில் பித்தளைப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் முருகன் (66), சண்முகம் (50) ஆகியோர், மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி மயில்சாமியிடம் தகராறில் ஈடுபட்டனர்.
கத்திக்குத்து
தகராறு முற்றிய நிலையில் முருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மயில்சாமியை சரமாரியாக குத்தினார். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். கத்திக்குத்து பட்டத்தில் படுகாயம் அடைந்த மயில்சாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் மயில்சாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரணை நடத்தினார்.
போலீஸ் வலைவீச்சு
விசாரணையில் சண்முகத்துக்கும் மயில்சாமிக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததும் அதன் காரணமாகவே 2 பேரும் சேர்ந்து மயில்சாமியை கத்தியால் குத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து சண்முகத்தை பிடிக்க போலீசார் சென்ற போது அவர், தலைமறைவானது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள்
இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் மயில்சாமியை சந்தித்து அவர் நலம் விசாரித்தார். அப்போது அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான நத்தம் விசுவநாதன் அரசு மருத்துவமனைக்கு வந்து, மயில்சாமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது நத்தம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், அ.தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். ஊராட்சி தலைவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story