தாடிக்கொம்பு அருகே வாலிபரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு
தாடிக்கொம்பு அருகே வாலிபரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிளை பறித்த 2 பேரை பொதுமக்கள் விரட்டி பிடித்தனர்.
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (வயது 27). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் தனது மாமனார் ஊரான தாடிக்கொம்பு அருகே உள்ள விராலிப்பட்டிபுதூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். தாடிக்கொம்பு அருகே அவர் வந்தபோது, 3 மர்மநபர்கள் வழிமறித்தனர். இதனால் தங்கப்பாண்டி தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
அப்போது அவர்கள் 3 பேரும் திடீரென்று தங்கப்பாண்டியை தாக்கியதுடன், அவர் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்தனர். மேலும் அவரை தள்ளிவிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளை பறித்தனர். பின்னர் மர்மநபர்கள் 3 பேரும், அந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து தங்கப்பாண்டி தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
அப்போது எரமநாயக்கன்பட்டி தரைப்பாலம் வழியாக சந்தேகப்படும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பொதுமக்கள் மறித்தனர். அப்போது அவர்கள் தப்பிக்க முயற்சித்தபோது, மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. இதில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்ற 2 பேரை பொதுமக்கள் விரட்டிபிடித்து, தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள், எரமநாயக்கன்பட்டியை சேர்ந்த வினோத்குமார் (24), விக்னேஷ் (21) என்பதும், தங்கப்பாண்டியின் மோட்டார் சைக்கிள் மற்றும் நகையை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய விஜயகுமாரை (27) போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story