தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
சுகாதார சீர்கேடு
தேரூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தேரியான்விளை பகுதியில் குலசைநகர் உள்ளது. இங்கு சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் வடிகால் ஓடை அமைக்கப்படாததால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளிவர முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பையா, தேரியான்விளை.
பஸ் வசதி தேவை
குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தலக்குளம் பகுதிக்கு தக்கலை பஸ் நிலையத்தில் இருந்து தடம் எண் 45 'ஏ' என்ற அரசு பஸ் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டது. மினி பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால், அந்த பகுதி வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் அரசு பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எஸ்.மூர்த்தி, தலக்குளம்.
சாலையை சீரமைக்க வேண்டும்
நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டில் சக்தி கார்டன் உள்ளது. இந்த கார்டனில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரஸ்னம், சக்தி கார்டன்.
பயணிகள் அவதி
ஆரல்வாய்மொழியில் காமராஜர் பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையத்துக்குள் பஸ்கள் செல்லும் முகப்பு பகுதியில் சாலை சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் மழைநீர் தேங்கி நிற்பதால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, பயணிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலையன்பன், ஆரல்வாய்மொழி.
சாலையில் பாயும் கழிவு நீர்
அத்திக்கடையில் இருந்து இலந்தையடிதட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வீட்டில் உள்ள கழிவு நீர் பாய்வதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதாசாரிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் சாலையில் பாய்வதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
-ஆனந்த், திக்கிலான்விளை.
வீணாகும் குடிநீர்
கோதநல்லூர் போரூராட்சிக்கு உட்பட்ட குமாரபுரம் பஞ்சாயத்து மூலம் மணலிக்கரை பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. மணலிக்கரை சந்தைக்கு செல்லும் சாலையில் ஒரு குடிநீர் குழாயில் நல்லி பழுதாகி உள்ளது. இதனால், குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நல்லியை மாற்றி குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.
-ஆர்.வில்சன், மணலிக்கரை.
வடிகால் ஓடை தேவை
கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட மாதவபுரத்தில் இருந்து சுவாமிநாதபுரம் செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள மாணவ-மாணவிகள் ஒற்றையால்விளையில் உள்ள பள்ளிக்கு செல்ல இந்த சாலையையே பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சாலையோரத்தில் கழிவுநீர் ஓடை முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் வடிந்தாடாமல் சாலையில் தேங்கி நிற்பதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, முறையாக வடிகால் ஓடை அமைத்து சாலையில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜவகர், மாதவபுரம்.
Related Tags :
Next Story